
"தமிழர்களுக்கும் தமிழ் சினிமாவுக்கும் நிச்சயம் நல்லது செய்வேன்," என்று இயக்குனர் கே.பாலச்சந்தருக்கு அளித்த பேட்டியில் கூறினார், நடிகர் ரஜினிகாந்த்.
சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடந்த தமிழ்நாடு திரைப்பட சங்கத்தின் 40-வது ஆண்டு விழா கலை நிகழ்ச்சியில், நடிகர் ரஜினிகாந்துடன் இயக்குனர் கே.பாலச்சந்தர் நேர்காணல் கண்டார்.
பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்த அந்நிகழ்ச்சியில், கே.பாலச்சந்தரின் கேள்விகளும், அவற்றுக்கு ரஜினிகாந்த் அளித்த பதில்களும் இதோ...
கேள்வி: "நினைத்துப் பார்க்க முடியாத பெரிய உயரத்தில் இருக்கிறாய். இப்போது மீண்டும் உன்னால் பழைய சிவாஜி ராவாக முடியுமா?"
பதில்: "நான் இன்னும் சிவாஜி ராவாகவே இருப்பதால் தான் ரஜினிகாந்தாக இருக்க முடிகிறது. இந்தப் புகழெல்லாம் சிவாஜி ராவை பாதிக்கவில்லை."
"இன்றைக்கு உன்னால் நினைத்தமாதிரி எங்கும் போக முடியாது. சாதாரண ஒட்டலில் போய் உட்கார்ந்து சாப்பிட முடியாது. நடிகரான பிறகு நிறைய இழந்துட்டோமே என்கிற வருத்தம் உண்டா?"
"சாதாரண மனிதர்களைப் போல எனக்கும் ஓட்டல்களுக்கு சென்று சாப்பிட்டு வர ஆசை உண்டு. அந்த சந்தோஷத்தை இழந்துவிட்டேன். சில நேரங்கள்ல நிம்மதியை இழந்திருக்கிறேன். சூழ்நிலை கைதியாக இருக்க வேண்டியுள்ளது. இவற்றைத் தியாகம் செய்துதான் இந்தப் புகழை அடைந்திருக்கிறேன்."
"வாழ்க்கை வரலாற்றை சுயசரிதையாக எழுதலாமே..?"
"சுயசரிதை எழுதினால் உண்மைகளை மறைக்காமல் அதில் குறிப்பிடவேண்டும். நான் உண்மைகளை அப்படியே எழுதினால் நிறைய பேர் மனசு கஷ்டப்படும். மகாத்மா காந்தியிடம் சுயசரிதை எழுதுவதற்கு தைரியம் இருந்தது. அந்தத் தைரியம் எனக்கும் வரும்போது எழுதுவேன்."
"உன்னைத் தூக்கி வைத்துள்ள தமிழ் சினிமாவுக்கு, தமிழ் மக்களுக்கும என்ன செய்யப் போகிறாய்?
"நிச்சயம் நல்லது செய்வேன். தமிழர்களும், தமிழ் சினிமாவும் பெருமைப்படுகிற மாதிரி ஒன்றை நிச்சயம் செய்வேன்."
"இன்றைக்கு நீயே இந்தியாவின் உச்ச நட்சத்திரம். வட இந்திய மீடியாவும் சொல்கிறது. இந்த நிலையை தக்க வைக்க என்ன பண்ணப் போகிறாய்?
"இதை எதிர்ப்பார்த்து நான் எதையும் செய்யவில்லை. அதனால், காப்பாற்றிக் கொள்ளவும் முயற்சி செய்யவில்லை. நான், என் வேலையை செய்துகொண்டு இருக்கிறேன். இப்போது இருக்கின்ற நிலை, ஒரு எந்திரனால் மட்டும் வந்ததில்லை. அதற்கு முன்னால் நான் செய்த நிறைய படங்களும் காரணம். அதேநேரத்தில், இந்த நிலையை எப்படி தக்கவைத்துக் கொள்ளப் போகிறோம் என்கிற பயம் இருக்கவே செய்கிறது."
"சில்வர்ஸ்டர் ஸ்டாலன் போல் ஒரு ஒன் மேன் ஆர்மி நீ. உனது பன்முகப் பரிமாணத்தைக் காட்டும் அளவு படம் எடுக்க இனி யாராலும் முடியாது என்று நினைக்கிறேன். நீயே ஏன் ஒரு படத்தை இயக்கக் கூடாது?"
"படங்களை இயக்குகிற ஐடியா எதுவுமில்லை. அது எனக்குத் தெரியாதது. நிறைய பொறுப்புமிக்கது அது."
"ஒருவேளை படம் இயக்கினால், எனக்கு உதவியாளர் பொறுப்பு கிடைக்குமா?"
"நிச்சயம், உங்களை உட்காரவைத்து வணங்கி, நீங்க சொல்கிற வேலையைச் செய்வேன்."
"இதுவரை நடித்தது எத்தனை படங்கள்?"
"154 படங்களில் நடித்துள்ளேன்."
"இந்தப் படங்களில் நாம நடிக்காம போயிட்டோமேன்னு நினைத்ததுண்டா..?"
"அப்படி ஓரிரு படங்கள் உண்டு."
"என்னென்ன படங்கள் என்று சொல்ல முடியுமா?"
"இல்லை... இப்போது சொல்வது சரியாக இருக்காது. நான் சொல்லவும் விரும்பவில்லை."
"ஐம்பது ஆண்டுகளைத் தாண்டியும் நிற்கிற உனது படங்கள் என்று எதைச் சொல்வாய்?
"ராகவேந்திரா, பாட்ஷா மற்றும் எந்திரன்."
"நீ மிகச் சிறந்த நடிகன். ஆனால், தேசிய விருது கிடைக்கவில்லை என்று ரசிகர்களைப் போலவே எங்களுக்கும் ஏக்கம் உண்டு. எப்போது தேசிய விருது பெறுவாய்?
"அது இயக்குனர் கையில் இருக்கிறது."
"நாடகங்களில் நடிக்க ஆர்வம் உண்டு என பல முறை சொல்லியிருக்கிறாய். இப்போது நாடகங்களில் நடிப்பாயா?"
"கண்டிப்பா நடிப்பேன்."
"மேஜர் சந்திரகாந்த் நாடகத்தை ஏப்ரல் 15 ஆம் தேதி போடப் போகிறேன். அதில் நடிப்பாயா?
"நீங்கள் சொன்னால், நீங்கள் இயக்கினால், நானும் நடிக்கிறேன்."
"ஆரம்ப காலகட்டத்தில் சிகரெட்டை தூக்கிப் போட்டு ஸ்டைல் காட்டினாய். சிகரெட்டும் அதிகமாகப் பிடிப்பாய். இப்போது?
"சிகரெட் பிடிப்பதை இப்போது நிறையவே குறைத்துவிட்டேன்."
"நான் இயக்கியதில் உனக்குப் பிடித்த படங்கள்..?"
"ரெண்டு படங்கள் ரொம்ப பிடிக்கும். 'அவள் ஒரு தொடர்கதை'யை எட்டு முறை பார்த்தேன். 'அரங்கேற்றம்' படத்தை 12 தடவை பார்த்தேன்."
"அரசியலில் பிடித்த தலைவர் யார்?
"லீ குவான் யூ. நவீன சிங்கப்பூரை உருவாக்கியத் தலைவர்."
"வாழ்க்கையில யாரையாவது பார்த்து பொறாமைப்பட்டதுண்டா?"
"இமயமலையில் உள்ள துறவிகளைப் பார்த்து ரொம்ப பொறாமைப்பட்டிருக்கிறேன்."
"உனக்குப் பிடித்த இயக்குனர் யார்? தயங்காமல் சொல்லலாம்"
"மகேந்திரன்."
"விரும்பிச் சாப்பிடும் உணவு?"
"சிக்கன்."
"உனக்கு நெருங்கிய நண்பர் யார்?"
"ராவ்பகதூர்."
"என்கிட்டே உனக்குப் பிடிக்காத விஷயம் எது?"
"நீங்கள் கோபப்படுவதைக் குறைத்துக்கொள்ள வேண்டும்."
"எல்லோரும் கேட்க நினைக்கும் கேள்வி இது. அரசியலுக்கு வருவாயா மாட்டாயா?"
"அது, அந்த ஆண்டவன் கையில் இருக்கிறது!"